புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவரொரு சிறுகதை, கட்டுரை ஆசிரியர் என்றே தெரியும். இதுவரை 38 நூல்கள் கொண்டு வந்திருக்கிறார். உதிர் இலை காலம் (1998); நிழல் வெளி மாந்தர் (2004); விலைபோகும் நினைவுகள் (2004), தூரத்து மணியோசை (2015), கொரியாவின் தமிழ் ராணி (2018), கடல்வெளி (2018), தென் தமிழின் பத்துக்கட்டளைகள் (2018), பக்தியின் பன்முகம் (2020) போன்றவை சில உதாரணங்கள். இவரது கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன, ஆயினும் இன்னும் பல இலத்திரன் வடிவில் (electronic text) இணையத்தில் உள்ளன. இவர் 1978-லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இந்திய சஞ்சிகைகளிலும், மௌனம், நாழிகை, உயிர்நிழல் போன்ற புகலிட இதழ்களிலும் வந்திருக்கின்றன. இவர் ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளிலும் கலந்து கொண்டு பங்களிப்பு செய்துள்ளார்.
இவரை சிலருக்கு இணைய எழுத்தாளரென்றே தெரியும். தமிழ் இணையம் என்பது தோன்றிய காலத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இன்றளவில் இலத்திரன் எழுத்தாக மிக அதிகமாக எழுதியிருக்கும் தமிழர்களில் இவரும் ஒருவர். இவர் இ-சுவடி மடலாடற்குழு மட்டுறுத்தர். பல மடலாடற்குழுக்களில் தொடர்ந்து எழுதி வருபவர். இ-மொழி என்றொரு வலைத்தளம் அமைத்து அதில் தனது எழுத்து சார்ந்த நடவடிக்கைகளை இலக்க வடிவில் பாதுகாத்து வருகிறார். வலைப்பூ என்றும் வலைப்பதிவென்றும் அழைக்கபடும் Webblog பதிவில் Power Blogger என்றழைக்கப்படுகிறார். இவர் மூன்று பதிவுகள் வைத்திருக்கிறார். கவிதைக்கொன்று, உரைநடைக்கொன்று, புகைப்படக் கலைக்கொன்று மூன்று பதிவுகள். இது தவிர இணைய இலக்க தொழில் நுட்பத்தில் இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கி, சர்வதேச வல்லுநர் குழுவுடன் நிருவகித்து வருகிறார். மதுரைத்திட்டம் எனும் அமைப்பின் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராக செயல்பட்டார். உத்தமம் எனும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப அமைப்பின் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்திருக்கிறார். இணையப் பல்கலைக் கழகத்தின் கௌரவ ஆசிரியர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். கணையாழி ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார்.

பாசுர மடல் எனும் தொடர் கட்டுரைகள் மூலம் இவரது ஆன்மீக ஈடுபாடு தமிழ் உலகிற்கு தெரிய வந்தது. 'இலக்கியத்தின் எல்லை நிலம் ஆன்மீகமே' என்று கூறும் இவர் பல ஐரோப்பிய ஆலயங்களில் சமயம் தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். ஸ்டுட்கார்டு விநாயக ஆலயத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுள்ளார். சுவிஸ் தேசத்தில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து இணையத்தில் ஆன்மீகக் கட்டுரைகள் படைத்து வருகிறார்.

திருச்சி வானொலி நிலையத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து அறிவியல் நிகழ்ச்சிகள் அளித்துள்ள இவர் உண்மையில் ஒரு மல்டிமீடியா ஆசாமி. பிரபலங்களுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அளித்துள்ளார். உம். சுஜாதா, யூகி சேது. இந்திய, ஐரோப்பிய தொலைக்காட்சியில் பலமுறை நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

இத்தனை முகங்களிலும் அதிகம் தெரியாத முகம், இவரது விஞ்ஞான முகம். இவர் இருமுறை கலாநிதி (டாக்டர்) பட்டம் வாங்கிய தொழில்முறை விஞ்ஞானி. உலகின் ஆகச்சிறந்த ஆய்வகங்களில் சூழலியல் தொடர்பான ஆய்வுகள் நடத்திய டாக்டர்.என்.கண்ணன், உலகின் மிகச்சிறந்த முதல் பத்து பேராசிரியருள், விஞ்ஞானிகளுள் ஒருவராக அடையாளம் காணப்படுகிறார். தற்போது ஓய்வு பெற்று செங்கல்பட்டில் வசித்து வருகிறார்.